சென்னை: நில பிரச்னையில் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளாமலும், உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் கூறி, ஆவடியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பாக இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம், தேவர் தெருவைச் சேர்ந்தவர் தேவி (38). இவரது கணவர் இறந்த நிலையில், இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது தந்தை நைனியப்பனுக்கு பட்டாபிராம், தண்டுறை ஆகிய பகுதியில் 5 கடைகளுடன் 12 சென்ட் நிலம் உள்ளது.
நைனியப்பன் கடந்த 2017ஆம் ஆண்டு இறந்த நிலையில், அவரின் சொத்துக்களுக்கு உரிமையாளர் யார் என்பதில் தேவி மற்றும் அவரது உறவினர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேவி, ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரணையை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தை அணுகி பிரச்னையை தீர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பீகாரில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலத்த காயம்.. 24 பேர் கவலைக்கிடம்!
இந்நிலையில், நில பிரச்னையில் போலீசார் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் அலைக்கழிப்பதாகக் கூறி, தேவி ஆவடி துணை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரைத் தடுத்து, பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், நிலப் புகார் குறித்து தேவி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்ட பட்டாபிராம் போலீசார், நிலம் தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி வியாழக்கிழமைகளிலும் சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை.. எப்போது வரை தெரியுமா?