சென்னை: ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, மத்திய அரசு 'ஆபரேசன் கங்கா' என்னும் பெயரில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டுவருகிறது. இதில், இதுவரை விமானங்கள் மூலம் 88 தமிழ் மாணவர்கள் உள்பட 1,370 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 2ஆவது நாளாக 45 பேர் வந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களுடன் சிறப்பு விமானம் நேற்று (மார்ச்.1) டெல்லி வந்தது. இதில், 3ஆவது நாளாக நேற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 மருத்துவ மாணவ- மாணவிகள் வந்தனர். இதில் கன்னியாகுமரியைச்சேர்ந்த 3 பேர் திருவனந்தபுரத்திற்கும், கோவை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 7 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேராக அந்த நகரங்களுக்கும் சென்றனர்.
மேலும், சென்னை 13, கோவை 4, மதுரை-3, தர்மபுரி-1 திருநெல்வேலி 1, தூத்துக்குடி-1, விழுப்புரம்-3, செங்கல்பட்டு-1, சேலம்-1, வேலூர்-3 உள்பட 37 பேரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் சார்பில் அயலக நலம் மற்றும் மறுவாழ்வு, சிறுபான்மையினர்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் அவரவர் சொந்த ஊர்களுக்குத் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசிற்குக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தமிழ்நாடு மாணவர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை சுமார் 88 மாணவர்கள் வந்துள்ளார்கள். மாணவர்களை இல்லம் சேரும்வரை தமிழ்நாடு அரசின் பாதுகாப்பில் இருப்பார்கள். பதிவு செய்யும் மாணவர்களைத் தூதரகத்திற்கு அனுப்பி, அவர்களை விரைவாக மீட்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் உக்ரைனில் இருந்து வந்த மாணவ- மாணவிகள் கூறுகையில், "உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து ஹங்கேரி நாட்டு எல்லைக்குச் சென்றோம். பின்னர் அங்கிருந்து இந்தியத்தூதரகம் எங்களைப் பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் அழைத்து வந்தனர்.
இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் இங்கே பாதுகாப்பாய் வந்துவிட்டோம். ஆனால், இன்னும் நிறைய மாணவர்கள் உக்ரைன் தலைநகரங்களில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள். எனவே, விரைவில் அவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும்.
போர் நடக்கும்போது எங்களுக்கு வீடியோ கால் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி உறுதுணையாக இருந்தார். எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். மேலும் இங்குப் பத்திரமாக மீட்டு வந்த தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எல்லைப் பகுதியில் இந்தியர்கள் என்றால் தாக்குகின்றனர். இதன் காரணமாக் தான் மிகவும் கஷ்டப்பட்டோம்" என்றனர்.
இதையும் படிங்க: கார்கிவ்வில் உள்ள மாணவர்களை இந்தியத் தூதரகம் அணுகவில்லை - உயிரிழந்த மாணவனின் தந்தை