ராம்சர் உடன்படிக்கை அல்லது ஈரநிலங்களுக்கான உடன்படிக்கை என்பது, ஈரநிலங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக சர்வதேச அளவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்படிக்கையாகும். 1971ஆம் ஆண்டில் ஈரானில் உள்ள ராம்சர் நகரத்தில் இதற்கான உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது.
அதனாலேயே நகரின் பெயரைத் தழுவியே ’ராம்சர் சாசனம்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஈரநிலங்களின் செழுமையை பேணுதலே ராம்சர் உடன்படிக்கையின் குறிக்கோள் ஆகும். சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களையும், குறிப்பாக பறவைகளின் புகலிடங்களையும் ராம்சர் அடையாளப்படுத்துகிறது.
ஈரநிலங்களின் மேலாண்மையை சிறப்பாக பேணும் பட்சத்தில் ராம்சர் அங்கீகாரம் வழங்கப்படும். ஈரநிலப் பாதுகாப்புக்காக பன்னாட்டுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலமும், உலகளாவிய ஈரநிலம் தொடர்பான பிரச்னைகளை அலசுவதற்கு ஒரு களத்தை வழங்கியதன் மூலமும், ஈரநிலங்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், ஒன்றிணைந்து பிரச்னைகளைத் தீர்ப்பதற்குமான வசதியை இந்த சாசனம் வழங்குகிறது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் பிச்சாவரம் சதுப்பு நிலம் ஆகியவை ராம்சர் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாடு வனத்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: சர்வதேச 'ராம்சார்' பட்டியலில் இணைந்த பிச்சாவரம்!