வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள தொற்று நோய், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அப்போது அமைச்சர் வேலுமணி, அனைத்துத்துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து அவர் கூறுகையில், கனமழை காலங்களில், தேவையான மீட்பு நடவடிக்கைகள் ஏற்படுத்துவதை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தண்ணீர் தேங்கும் பாலங்களில் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும். வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் அழைக்கும் போது அவர்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
மரங்கள் சாலையில் விழும் பட்சத்தில் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய அனைத்து துறை அலுவலர்களும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.
ஆபத்து நேரங்களில் பொதுமக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி செய்ய வேண்டும். இதற்கு அனைத்து வகை மருத்துவ வசதி ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினர் ஆபத்தான காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் பணிகள், மருத்துவத்துறை, வானிலை நிலவரம் தொடர்பான விபரங்கள், உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள், ஆபத்துக்காலங்களில் அவர்கள் திறம்பட எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை பெறவேண்டும் என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு