இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெற்றுத் தருவதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தில் இது தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன. இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனாலும், இந்தியா நடுநிலை வகித்திருப்பது தமிழர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐநா பொது அவைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டுமென்றும் குற்றங்களை ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்கு அமைக்கப்பட்டது போன்று, பன்னாட்டு பொறிமுறையை உருவாக்க வேண்டுமெனவும் பாமக தொடர்ந்து வலியுறுத்திவந்தது. பாமக முன்வைத்த கோரிக்கைகளை தற்போது ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானமாக கொண்டு வந்தது பெரும் முன்னேற்றமாகும்.
இதன்மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், போர்க்குற்றங்கள் குறித்த புகார்கள் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் திரட்டப்பட்டு ஆவணப்படுத்தப்படும். அதன்பின்னர் மனித உரிமைகளில் அக்கறையுள்ள எந்த நாடும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் வழக்குத் தொடர முடியும். அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டால் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, இலங்கையில் போர்க்குற்றங்களை நிகழ்த்திய இராஜபக்சே குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனையை பெற்றுத் தர முடியும்.
இதுகுறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதங்களில் இந்தியா தவறாமல் கலந்து கொண்டு இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணங்களை வலுப்படுத்தவும், போர்க்குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி தண்டிப்பதன் மூலம் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தரவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.