சென்னை: பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக பயணம் செய்தவர், நடிகை காயத்ரி ரகுராம். பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே, காயத்ரிக்கும் அண்ணாமலைக்கும் இடையே பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இதனிடையே காயத்ரி ரகுராமிற்கு அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் இருந்தும் காயத்ரி ரகுராம் ஓரங்கட்டப்பட்டார்.
இந்தச் சூழலில்தான், திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆடியோ விவகாரம் பாஜகவில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ விவகாரத்தில் டெய்சி சரணுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் செயல்பட்டார். சமூக வலைதளத்தில் திருச்சி சூர்யாவிற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.
மேலும், பாஜகவின் வார் ரூமில் பெண்களை இழிவாகப் பேசுகிறார்கள் என்றும் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதையடுத்து உட்கட்சி விவகாரம் குறித்து பொது வெளியில் பேசி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்ததாக, காயத்ரி ரகுராமை 6 மாதம் இடைநீக்கம் செய்து அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் நேற்று(ஜன.13), சமூக வலைதளங்கள் வாயிலாக தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தார். அதனை ஏற்று அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக விடுவிப்பதாக தமிழ்நாடு பாஜக அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார். அதில், "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.
என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காகப் போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைபயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்.
பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம், பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை. புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் அதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.