சென்னை: சென்னை துறைமுகம் வளாகத்தில் கோஸ்டல் ஒர்க் பிளேஸ் என்ற இடத்தில், ஆயில் ஏற்றிச் செல்லக்கூடிய ஒடிசாவைச் சேர்ந்த கப்பல் ஒன்று கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை துறைமுகத்திற்கு வந்தது. அந்த கப்பலில் பழுது ஏற்பட்டதால் ராயல் டெக் என்ற தனியார் நிறுவனம் மூலம், கப்பலைப் பழுது பார்க்கும் வேலை நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், நேற்று (நவ.10) இரவு கப்பலின் இன்ஜின் பகுதியில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது, கேஸ் கட்டர் மூலமாகப் பழுது பார்த்து வந்துள்ளனர். கப்பலிலிருந்த போல்ட்டை, கேஸ் கட்டர் மூலம் அகற்றியபோது எதிர்பாராத விதமாக அது அருகிலிருந்த கேஸ் பைப் லைன் மீது உரசி வெடித்தது. இதில், பழுது பார்க்கும் பணியிலிருந்த சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் காயமடைந்த தந்தையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், ஜீவரத்தினம், காசிமேட்டை சேர்ந்த ஜோஸ்வா ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறைமுக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறைமுக காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் கப்பலில் பழுது பார்க்கும் பணியைச் செய்து வந்த ராயல் டெக் என்ற தனியார் நிறுவனம் மன்னடி பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், கப்பல் பழுது பார்க்கும் போது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல், அஜாக்கிரதையாக செயல்பட்டு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் கண்மாயில் சென்ற நுரை.. தண்ணீர் ஊற்றி அகற்றிய தூய்மைப் பணியாளர்கள்!