இமய மலையில் பனிப்பாறைகள் வெடித்ததில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் சுரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஈடுபட்டுள்ளது.
இந்த மீட்புப் பணியில் சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் உதவி வருகிறது. இதுகுறித்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவன தலைமை அலுவலர் ஷியாம் குமார் கூறுகையில், "புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து நிகழ் நேரத்தில் அனுப்பும் வீடியோ ட்ரோன்கள், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கும், மீட்புப் படையினருக்கும் உணவு, அத்தியாவசிப் பொருள்களை எடுத்துச்செல்லும் ட்ரோன்கள், சுரங்கத்துக்குள் சென்று மின் வெளிச்சத்துடனும், தெர்மல் ஸ்கேனர் மூலமாக மனித நடமாட்டத்தை கண்டறிந்து மீட்கும் ட்ரோன்கள், வெள்ளத்தால் சேதமடைந்த மின் கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் ட்ரோன்கள் ஆகியவற்றை அங்கு பயன்படுத்தி வருகிறோம்.
ட்ரோன்களை விற்பனை செய்து, ட்ரோன்கள் மூலம் நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிவருகிறோம். சர்வதேச அளவிலான ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியிலேயே உள்ளது. இது புதிய தொழில்நுட்பம் என்பதால் நாள்தோறும் புதிய மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் தொடர்ந்து ஆராய்ச்சி, மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.
நாங்கள் பிரதானமாக விவசாயத்துறையில் கவனம் செலுத்திவருகிறோம். நிறுவனங்களின் தேவைக்கு ஏற்றதுபோல் ட்ரோன்களை வடிவமைக்கிறோம்.
அடுத்தகட்டமாக, வெளிநாடுகளைப்போல ட்ரோன்கள் மூலம் ஏர் டாக்சி சேவையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறோம். இதற்காக உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணிகளில் இறங்கியுள்ளோம். விரைவில் கார் பார்க்கிங் அளவு கொண்ட இடத்தில் ஹெலிபேடு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதிலிருந்து மக்கள் விரும்பும் இடத்துக்கு ஆளில்லா விமானம் வாயிலாக கொண்டு செல்லப்படுவர்" என்றார்.
இந்தியாவில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் சாத்தியமா என்ற கேள்விக்கு, "பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவும் அதிகரிக்கிறது. நாங்கள் உருவாக்கும் தொழில்நுட்ப சேவையால் மக்கள் குறைந்த செலவில் பயணிக்கலாம்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: தீவிரமான இயற்கை சீற்றம்: அபாயத்தில் இமயமலையை சுற்றியுள்ள மாநிலங்கள்!