சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் சந்து பகுதியில், கரும்புத் தோட்டம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா போதையில் நுழைந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் குடியிருப்பின் கட்டட ஜன்னல் கண்ணாடிகளில் கல்லால் எறிந்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டதால் அப்பகுதிவாசிகள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
மேலும், முகமூடி அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள் கங்காதீஸ்வரர் கோயில் சந்து பகுதியில் தெருவோரம் நிறுத்தி வைத்திருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டுச்சென்றனர். இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அராஜகத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
காவல் துறையினர் விசாரணையில் குடியிருப்பு பகுதியைச்சேர்ந்த தினேஷ் என்ற இளைஞரைத்தேடியே கும்பல் வந்ததும், அவர் அங்கு இல்லாததால் ஆத்திரத்தில் வாகனங்களை அடித்து உடைத்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் தினேஷ் என்ற நபரால் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவரிடம் கஞ்சா வாங்கி இங்குள்ள கங்காதீஸ்வரர் கோயிலுக்குச்சொந்தமான இடத்தில் வைத்து இளைஞர்கள் பலர் கஞ்சா புகைத்து வருகின்றனர்.
மேலும், எங்கிருந்தோ சிவலிங்கம் ஒன்றை எடுத்து வந்து அதை கோயிலுக்குச்சொந்தமான காலி இடத்தில் வைத்து அந்த இடத்தை கஞ்சா புகைக்க வழக்கமான இடமாக மாற்றியுள்ளதாகவும், கஞ்சா போதையில் அடையாளம் தெரியாத நபர்கள் குடியிருப்பு வளாகத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் இருக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் இன்ஸ்டா காதல் மன்மதன் கைது!