சென்னை: பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் அரசு சேவை, வங்கி சேவை இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளிட்டவற்றை குறி வைத்து போலியாக உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடி செய்யும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்யும் பயனாளர்களை குறி வைத்து நூதன முறையில் மோசடிகளை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர்.
பொதுவாக ஐஆர்சிடிசி என்ற இணையதளத்தின் மூலமாகவும், செயலிகள் மூலமாகவும் பொதுமக்கள் ரயில்வே டிக்கெட் புக்கிங் போன்றவற்றை செய்கின்றனர். இந்த ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியை போலியாக உருவாக்கி பொதுமக்களை சிக்க வைத்து, வங்கி தகவல்கள் மற்றும் செல்போனில் உள்ள தகவல்களை திருடி மோசடி செய்யும் சைபர் கிரைம் கும்பல் பொதுமக்களை குறி வைத்துள்ளதாக ஐஆர்சிடிசி மற்றும் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது.
குறிப்பாக irctc.co.in என்ற இணையதள முகவரியில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிறு மாற்றத்தை செய்து போலியாக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த போலி இணையதள பக்கத்தின் லிங்குகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக அனுப்பி பொதுமக்களை சிக்க வைக்க பயன்படுத்துவதாக கூறுகின்றனர்.
இதேபோன்று ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற அதிகாரப்பூர்வ செயலி ஒன்று போலியான செய்திகளையும், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் மூலமாக பொதுமக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி பதிவிறக்கம் செய்ய வைத்து மோசடி நடைபெறுகிறது. இதுபோன்று கவர்ச்சிகரமான விளம்பரங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்தால் டிக்கெட்டுகள் உடனடியாக புக் ஆகிவிடும் என்றும் பரிசுகள் கிடைக்கும் மற்றும் டிக்கெட் விலையில் தள்ளுபடி கிடைக்கும் என ஆசை வார்த்தை காட்டி, போலி செயலியை பதிவிறக்கம் செய்து இணையதளத்திற்குள் பொதுமக்களை சிக்க வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்பின் இந்த செயலி மற்றும் இணையதளத்திற்கு நுழைந்து பார்க்கும் பொழுது உண்மையான இணையதளம் மற்றும் செயலில் உள்ளது போன்ற பக்கங்கள் இருப்பதால் பொதுமக்கள் நம்பி பல்வேறு தகவல்களை பதிவிடுகிறார்கள். இதன் மூலமாக வங்கி தகவல்கள் உள்ளிட்டவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளும் மோசடி கும்பல் வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி மோசடி செய்வதாக தெரிவிக்கின்றன.
மேலும், ஏபிகே (APK) என்ற அமைப்பில் எளிதில் செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம் என குறுஞ்செய்தி அனுப்பும் மோசடி கும்பல், செயலிகளை பதிவிறக்கம் செய்தவுடன் உண்மையான செயலி உள்ளது போல் செயல்படும் எனவும், ஆனால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும்பொழுது மறைமுகமாக டேட்டாக்களை திருடும் அளவிற்கான செயலிகளும், பதிவிறக்கமாகி செல்போனில் உள்ள வங்கித் தகவல்கள் மற்றும் பிற தகவல்களை திருட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே ஐஆர்சிடிசி அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மற்றும் ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட் என்ற செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது கவனமாக பயன்படுத்துமாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்றவற்றின் மூலமாக வரும் லிங்குகளில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல், கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், செல்போனில் நமக்கு தெரியாமல் மறைமுகமாக செயலிகள் பதிவிறக்கம் ஆவதை தடுக்கும் வகையிலான அமைப்பை செல்போனில் ஆக்டிவேட் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். கடவுச்சொல் போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் இது போன்ற மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, ஐஆர்சிடிசி இணையதளத்தில் உண்மையான செயலி குறித்த தகவல்கள் லிங்குகள் இருந்தால் மக்கள் விழிப்புணர்வு அடையும்படி தகவல்கள் இருக்க வேண்டும் எனவும், மேலும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்படும் பொதுமக்களின் தகவல்களை விளம்பரங்களுக்காக மூன்றாம் நபர்களுக்கு பகிராமல் இருக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சென்னை டூ பெங்களூரு இனி 30 நிமிடத்தில் செல்லலாம்.. சென்னை ஐஐடியின் 'ஹைப்பர்லூப்' திட்டம்!