சென்னை: மின்சாரத்தை துண்டிக்கப் போவதாக கூறி திரைப்பட பாடகி சின்மயியின் உறவினரிடம் ஆன்லைன் லட்சக்கணக்கில் பணம் திருடிய மோசடி கும்பல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
திரைப்பட பாடகி சின்மயியின் உறவினரான ரவீந்திரன் என்பவர் சென்னை அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்து உள்ளது. அதில், நீங்கள் மின்சார பில் கட்டவில்லை என்றும், உடனடியாக சேவையை தடை செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் மெசேஜில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து ரவீந்திரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது எதிரில் பேசியவர், உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் என்றும், அதனை கிளிக் செய்து மின்சார பயனீட்டாளர் எண் மற்றும் 10 ரூபாய் பணம் கட்டுங்கள் என்று கூறி உள்ளார்.
அதை நம்பிய ரவீந்திரன், அவரது எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 10 ரூபாய் செலுத்த முயன்று உள்ளார். ஆனால் அவர் பணம் செலுத்தும் போது, தொழில்நுட்ப கோளாறு என்று வந்து உள்ளது. இது பற்றி ரவீந்திரன் லிங்க் அனுப்பியவரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அந்த நபர் வேறொரு நபரின் டெபிட் கார்டு நம்பரை கேட்டு பெற்றார். மேலும் அந்த டெபிட்கார்டின் பாஸ்வேர்டை பெற்றார்.
அந்த நபர் சுமார் 1 மணி நேரமாக ரவீந்திரனிடம் பேசியுள்ளார். இதன் பிறகு ரவீந்திரனின் உறவினரான சின்மயி அந்த நபரிடம் இந்த பிரச்னை குறித்து பேசியபோது, இணைப்பை துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ரவீந்திரன் வங்கி கணக்கில் இருந்து சிறிது சிறுதாக 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் வரை பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த ரவீந்திரன், அவரின் உறவினரும் பிரபல பாடகியுமான சின்மயியிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதன் தொடர்பாக ரவீந்தரன் மற்றும் சின்மயி இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட். 12) புகார் கொடுத்து உள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "நாடாளுமன்ற அவையை பிரசார கூடமாக ஆக்கிவிட்டார்கள்"- எம்.பி. விஜய் வசந்த் வருத்தம்!