சென்னை: குன்றத்தூர் அடுத்த சம்பந்தம் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா(38), எலக்ட்ரிசீயனாக வேலை செய்து வந்தார். நேற்று(செப்.12) மாலை தனது இரண்டு பிள்ளைகளுடன் விநாயகர் சிலையை செம்பரம்பாக்கம் ஏரியில் கரைக்க சென்றுள்ளார்.
ஏரியின் 5வது மதகின் அருகே பிள்ளைகளை நிறுத்தி விட்டு, பாரதிராஜா கீழ் இறங்கி விநாயகர் சிலையை கரைக்கும் போது திடீரென நிலை தடுமாறி நீரில் விழுந்துள்ளார். இதனை கண்டதும் அவரின் குழந்தைகள் அலறியுள்ளனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் நீரீன் ஆழம் அதிகம் இருந்தால் பாரதிராஜா மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து பூவிருந்தவல்லி தீயணைப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி கிடந்த பாரதிராஜாவை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.
இதையடுத்து குன்றத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பாரதிராஜாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக பெண்ணை தாக்கிய நபர் கைது