சென்னை: பூந்தமல்லி பைபாஸ் கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால் காந்தி சிலை சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய ஆலோசித்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 4-வது வழித்தடம் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை செயல்படுத்தப்படவுள்ளது.
26.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தத் தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பாலம் வரை உள்ள வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் 18 ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
மெரினா கடற்கரையில் இருந்து மயிலாப்பூர், நந்தனம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், அய்யப்பந்தாங்கல், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளை இணைத்து பூந்தமல்லி சென்றடையுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பின் மீண்டும் மெரினா கடற்கரை காந்தி சிலை மாற்றம் செய்யப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘பேரறிவாளன் விடுதலை - வரவேற்பும், வருத்தமும்....