2014ஆம் ஆண்டு இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சையது அலி நவாஸ், அப்துல் சமீம், கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்ளிட்டோர் பிணையில் வெளிவந்து தலைமறைவாகினர்.
இவர்களை தேசிய புலனாய்வு முகமை, உளவுத் துறை, தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தது. இந்தச் சூழலில் கஜா மொய்தீனும் சையது அலி நவாசும் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் துப்பாக்கிகளுடன் சிறப்பு புலனாய்வு காவல் துறையினரிடம் பிடிபட்டனர். மேலும் அவர்களுடன் அப்துல் சமத் என்பவரும் சிக்கினார்.
இவர்களுக்கு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கி அடைக்கலம் கொடுத்த பயங்கரவாதிகள் இம்ரான்கான், முகமது சையத், ஹனீஃப் கான் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 8ஆம் தேதி பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டனர்.
இதனிடையே, களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலைசெய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் சமீமும், தவுபிக் என்பவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, பெங்களூருவில் கைதான மூன்று பயங்கரவாதிகளையும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய கியூ பிரிவு காவல் துறையினர் அவர்களை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணையில் பயங்கரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. காஜா மொய்தீன், தங்களை இயக்கும் தலைமை பயங்கரவாதி குறித்தும் விசாரணையில் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
காஜா மொய்தீன் தலைமை பயங்கரவாதியிடம் புதிய மென்பொருள் வசதி மூலம் தொடர்புகொண்டு பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்தத் தலைமை பயங்கரவாதி யார் என்பது குறித்தும் அவர் எந்த நாட்டிலிருந்து இவர்களை இயக்குகிறார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.