சென்னை: அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ’சிட்டிசன் ஃபோரம்’ என்ற அமைப்பின் நிர்வாகி கிருஷ்ணகுமார் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை இரும்புகரம்கொண்டு தடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாறு ஆற்றின் கரைப்பகுதி ஆக்கிரமிப்பால், மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒக்கியம், துரைப்பாக்கத்தில் மாற்று இடம் தரும் திட்டம் முழுமையாக அமல்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், கூவம் மறுசீரமைப்பு அறக்கட்டளை மூலம் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாக விளக்கமளித்தார்.
மேலும், தடை உத்தரவு இல்லாத இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் என்ன நடவடிக்கை? - தலைமைச்செயலாளர் கடிதம்!