சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று (அக்.25) மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து ராஜ்பவனை நோக்கி கேட்டின் முன்பாக வீசியுள்ளார்.
முதலில் கமலாலயம் இப்போது 'ஆளுநர் மாளிகை': பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கிண்டி காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர் ரவுடிகள் பட்டியலில் உள்ள தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத் என்கிற 'கருக்கா வினோத்' என்பதும் தெரியவந்தது. மேலும் வினோத் ஏற்கனவே, கடத்த பிப்ரவரி மாதம் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
காவல் நிலையம், மதுபான கடை, கமலாலயம் என தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: அதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், 2017-ல் தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் மீதும் வினோத் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுபான கடைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மதுபான கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
குண்டாஸில் சிறை: கடந்த பிப்ரவரி மாதம் கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் போலீசாரின் விசாரணையில், நீட் தேர்வுக்கு (NEET Exam) எதிராக பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்திருந்தார், ரவுடி கருக்கா வினோத். அந்த வழக்கில் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து வினோத் வெளியே வந்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் குண்டு வீச காரணம் நீட் தேர்வா?: இந்த நிலையில் தான், மீண்டும் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சில் இன்று ஈடுபட்டுள்ளார். தற்போது போலீசார் நடத்திய விசாரணையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தான் பெட்ரோல் குண்டு வீசியதாக அதே காரணத்தை மீண்டும் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக ஆளுநரை சந்திக்க வந்ததாகவும்; ஆனால், தன்னை யாரும் அனுமதிக்க வில்லை என்பதால் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி வினோத்துடன் வேறு யாராவது வந்தார்களா? இவரின் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக சென்னை மாநகர் உட்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் தீவிர கண்காணிப்பில் சில சமூக விரோதிகள் தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக தங்களே பெட்ரோல் குண்டு வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையால் அவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் மீது இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அனைத்து தரப்பினர் இடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரும்புக்கரம் கொண்டு போலீசார் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: Breaking News: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத் கைது!