சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து ஒளியை தடுக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் எனப்படுகிறது. ஜோதிட ரீதியாக சூரியனும், சந்திரனும் நேர்க்கோட்டில் பயணிக்கும் போது ராகு அல்லது கேதுவை தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்தாண்டின் சந்திர கிரகணம் நவம்பர் 8-ம் தேதி செவ்வாய்கிழமை நிகழ்கிறது. கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்க இயலாது. பகுதியளவு சந்திர கிரகண நிலைகளை கவுகாத்தி, கொல்கத்தா, அகர்தலா உள்ளிட்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து பார்க்க இயலும். சந்திர கிரகண முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பார்க்க முடியும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2:39 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் 6:39 மணிக்கு முடிவடைகிறது. நாகாலாந்து மாநிலம் கோஹிமா பகுதியில் மட்டும் மாலை 4:29 மணியளவில் சந்திர கிரகணத்தின் உச்சநிலையை பார்க்கலாம் என்றும், சென்னையில் மாலை 5:39 மணியளவில் சந்திர கிரகணம் தெரியும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சந்திர கிரகணம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி முருகன் கோயிலில் பிற்பகல் 2:30 மணியளவில் சாத்தப்பட்டு மாலை 7 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை நடை சாத்தப்படுகிறது.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காலை 8:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை 11 மணிநேரம் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் திருத்தணி முருகன் கோயில் நடை சந்திர கிரகண நேரத்திலும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம், கொடைக்கானல் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி https://youtu.be/BjKUlaGmE2g என்ற யூடியூப் லிங்க் மூலம் செல்போன் மற்றும் கணினி வாயிலாக சந்திர கிரகணத்தை பார்த்து ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2023-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 சதவீத இடஒதுக்கீட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் - திருமாவளவன்