சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 40 இடங்களில் இன்று (பிப். 15) காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மங்களூர் குக்கர் வெடிகுண்டு சம்பவம் மற்றும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் போன்றவற்றில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை, கோவை, நெல்லை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, பழனி, குன்னூர் உள்பட சுமார் 40 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி குன்னூர் ஓட்டுப்பட்டரையில் வசிக்கும் முகமது என்பவர் வீட்டிலும் உமரிக்காட்டேஜ் பகுதியில் வசிக்கும் அர்ஷத் என்பவரிடமும் என்ஐஏ ஆய்வாளர் சஜ்ஜன் சிங்க் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
திருவண்ணாமலை - நல்லவன் பாளையத்தில் உள்ள இரண்டு பேரிடம், என்ஐஏ பிரிவைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை - கரிக்கா தோப்பு பகுதியில் வசிக்கும் அன்வர்தீன் என்பவரது வீட்டில் அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தப்படுகிறது நான்கு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் கட்டளை தெருவில் உள்ள கமாலுதீன் என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
தென்காசி - அச்சன் புதூர் பகுதியில் ஹரினி ஆயிஷா என்ற பெண்மணி வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேலத் தெருவைச் சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியிலிருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் மூன்று அதிகாரிகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி - ஜோதி நகரில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி (எ) சையது ரகுமான் வயது (51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு, குனியமுத்தூர் உட்பட 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் - இதனைத் தொடர்ந்து மங்களூர் பகுதியில் குக்கர் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, திருப்பூர் மாநகருக்குட்பட்ட ராம் காலனியை சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் நல்லூர் மண்டலத்திற்குட்பட்ட திருநகர் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பாஷா ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். பின்னர் இவர்கள் இருவரையும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் பறக்கை ரோடு விலக்கு பகுதியில் குடியிருந்து வரும் காஜா முகைதீன்(34) வீட்டில், ஆய்வாளர் கணேஷ் பாபு தலைமையில் என்ஐஏ அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். காஜா முகைதீன் செல்போண் பறிமுதல் செய்த நிலையில், 3 மணி நேர சோதனைக்குப் பின் என்ஐஏ அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் கே.டி.எம் தெருவில் வசிக்கக்கூடிய தாவா சென்டர் பணியாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி பீமநகர் ராஜா காலணி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சேக் தாவூத் (34) வீட்டில் காலை 6 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் - பழனி அருகே நெய்க்காகப்பட்டி பள்ளிவாசல் அருகில் வசித்து வரும் ராஜா முகமது (35) வீட்டில் காலை 4 மணி முதல் தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் தென்றல் நகர் 8வது தெருவில் வசித்து வருபவர் முகமது நியமத்துல்லாஹ் இவரது இல்லத்தில் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!