சென்னை: சூளைமேடு கில்நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர், ஜெயராம் (65). தொழிலதிபரான இவர், மேன்பவர் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சென்னையில் பல்வேறு சொத்துக்கள் உள்ளன. மேலும் துபாய் உள்ளிட்ட நாடுகளிலும் தொழில் செய்து வருகிறார்.
இதனிடையே ஜெயராம் தொழில் காரணமாக துபாயில் குடும்பத்தோடு குடி பெயர்ந்துள்ளார். இந்த நிலையில் ஜெயராம் சார்பாக அவருடைய அதிகாரப்பூர்வ ஏஜென்ட் ராமச்சந்திரன் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “தொழிலதிபர் ஜெயராம் வீட்டுக்கு சரவணன் என்பவர் வீட்டு வேலைக்காரனாக சேர்ந்தார். பல ஆண்டு காலமாக விசுவாசமாக இருந்த சரவணனை, குடும்ப உறுப்பினர்போல் ஜெயராம் நடத்தினார். சரவணனின் குடும்ப கஷ்டத்தை தீர்ப்பதற்காக பல லட்சங்கள் கொடுத்தும் ஜெயராம் உதவினார்.
இந்த நிலையில் ஜெயராம் அடிக்கடி வெளிநாடுகள் சென்று தொழில் செய்ய இருப்பதால், அவர் தனது குடும்பத்தோடு துபாயில் குடியேறினார். அவருக்குச் சொந்தமான நிலங்கள், சொத்துக்கள், வீடு ஆகியவற்றை விசுவாசமாக இருந்த வேலைக்காரன் சரவணனிடம் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு, கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயராம் துபாய் சென்றார்.
வேலைக்காரராகவே இருக்கும் சரவணன் வாழ்க்கையில் முன்னேறி பணக்காரனாக மாறுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள நிலத்தில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழிலுக்கு ஜெயராம் சரவணனுக்கு உதவினார். இதன் அடிப்படையில் சென்னை சூளைமேடு கில்நகர் 2வது தெரு பகுதியில் உள்ள நிலத்தில், 16 வீடுகள் அடங்கிய இரண்டு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டி விற்பனை செய்வதற்கு ஜெயராம், சரவணனிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
அதில் வரும் லாபத்தில் 50 சதவீதம் தனக்கும், 50 சதவீதம் சரவணன் எடுத்துக் கொள்ளுமாறு ஒப்பந்தம் போட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு வாக்கில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 வீட்டையும் கட்டி முடித்த சரவணன், அதனை விற்பனை செய்வதற்கு விளம்பரம் செய்துள்ளார்.
சென்னையில் நம்பிக்கைக்குரிய விசுவாசமான நபரான சரவணனிடம் சொத்துக்களை ஒப்படைத்ததால், அனைத்தையும் மறந்து வெளிநாட்டில் தொழில் செய்து வந்தார், ஜெயராம். இந்த நிலையில் கட்டப்பட்ட வீடுகள் குறித்து சரவணனிடம் ஜெயராம் கேட்கும்போது, இதுவரை விற்பனை ஆகவில்லை என்றே சரவணன் தெரிவித்து வந்துள்ளார்.
ஏழு வருடம் கழித்து சென்னைக்கு வந்து ஜெயராமன் சோதனை செய்த பார்த்துபோது, சரவணன் மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். வீடுகள் கட்டப்பட்ட அடுத்த வருடமே அனைத்து வீடுகளும் விற்பனை செய்யப்பட்டு, அந்த பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.
மேலும் சூளைமேட்டில் உள்ள மற்றொரு சொகுசு வீட்டையும் போலி ஆவணம் மூலம் மாற்றியதையும் ஜெயராம் கண்டுபிடித்தார். வெளிநாடு செல்வதற்கு முன் 14 சொகுசு கார்கள் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் வீட்டில் வைத்திருந்த நிலையில், மொத்தமாக 11.90 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் சரவணன் மோசடி செய்து பணக்காரனாக மாறியது தெரிய வந்தது.
இவ்வாறாக மோசடி செய்த பணத்தில் லார்ட் பாலாஜி என்கிற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வந்துள்ளார், சரவணன். தன்னுடைய சொத்துக்களை எல்லாம் அபகரித்து மோசடியாக விற்பனை செய்து, பல்வேறு சொத்துக்களை குவித்துள்ளதும் ஜெயராமுக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து சரவணனிடம் ஜெயராம் கேட்டபோது, செய்த மோசடிக்கு மன்னிப்பு கேட்டு, தான் மோசடி செய்த அனைத்து சொத்துக்களையும் திருப்பித் தருவதாக கூறி பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இருப்பினும் சரவணன் மோசடி செய்த சொத்துக்களை திருப்பித் தரவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள ஆவண மோசடி தடுப்பு பிரிவு அலுவலர்கள், சரவணன் மற்றும் அவரது கூட்டாளி கிருஷ்ணன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மோசடி உறுதியானதால் சரவணனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சரவணனிடம் விசாரணை நடத்தியதில், தொழிலதிபர் ஜெயராமன் மீது சிபிஐ வழக்கு இருப்பதாலும், வெளிநாட்டில் அதிக தொழில் இருப்பதால் விசுவாசமாக நடந்து கொண்டிருந்த தன் மீது சந்தேகம் வராது என்ற அடிப்படையில் சொத்துக்களை மோசடி செய்ததாக சரவணன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது வரை அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்து சேர்த்த சொத்துக்கள் தொடர்பான விவரங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் மொத்தமாக ஜெயராமிடம் இருந்து 11.90 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்து, எவ்வளவு சொத்துக்கள் சரவணன் வாங்கி குவித்துள்ளார் என்பது குறித்து பட்டியலை தயாரித்து வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வருமானவரித்துறை மூலம் சரவணனின் சொத்துக்கள் விவரத்தையும் கண்டறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் காவல் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மேலும் ஒரு போலி என்ஐஏ அதிகாரி கைது