சென்னை: இந்திய விடுதலைக்காகப் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துத் தனது மாணவப் பருவம் தொடங்கி, போராடியவர் சங்கரய்யா. இவர் தனது 100 ஆவது பிறந்தநாளை வரும் ஜூலை 15 ஆம் தேதி கொண்டாட உள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.
வாழும் வரலாறு சங்கரய்யா!
அந்தக் கோரிக்கையில், "விடுதலைக்குப் பிறகும், உழைக்கும் மக்களின் உரிமைக்காக, சமத்துவச் சமூகத்தைக் கட்டமைத்திடத் தொடர்ந்து போராடியவர் சங்கரய்யா. சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை என பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
பாடப் புத்தகத்தில் மட்டுமே விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்து படிக்கும் வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக போராடிய பெருமகனார், நூறாண்டு காலம் நம்மோடு வாழ்கிறார் என்பது அரிதான, மகிழ்வான அனுபவமாகும்.
சங்கரய்யா பிறந்த நூற்றாண்டை கோவில்பட்டியில் அவர் பயின்ற பள்ளியும், மதுரையில் அவர் பயின்ற அமெரிக்கன் கல்லூரியும் உரிய முறையில் கொண்டாட வேண்டும்.
உழைப்பின் உருவம்
வாழும் விடுதலைப் போராட்ட வீரர் நூற்றாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. அத்தகைய வாய்ப்பு, தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைத் தக்க முறையில் பயன்படுத்தி, பெரும் மகிழ்ச்சியுடன், மக்களோடு இணைந்து அரசும் கொண்டாட வேண்டும்.
எளிமையின் சின்னமாக, நேர்மையின் எடுத்துக் காட்டாக, உழைப்பின் உருவமாக நம்மோடு வாழும் சங்கரய்யா 100 ஆவது பிறந்தநாளை அரசு விழாவாகத் தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும்" என்று முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வாய்க்கால்!