தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்திற்குள் இந்த பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். இதன்மூலம் ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டில் இலவச பாஸ் வழங்குவதில் தாமதமானது.
இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,அடிக்கடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எனவே, மாணவர்களுக்கு இம்முறை எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பஸ் பாஸ்களை வழங்க வேண்டிய நிலைக்கு போக்குவரத்துத் துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் - 3,60,000, விழுப்புரம் - 4,70,435, சேலம்- 2,94,800, கோவை-3,40,000, கும்பகோணம் - 3,76,558, மதுரை- 3,30,000, திருநெல்வேலி- 2,49,555 என மொத்தமாக 24,21,348 பஸ் பாஸ்கள் வழங்கப்படவுள்ளன. தற்போது வழங்கப்படும் பஸ் பாஸ், மாணவர்களின் விவரம் அனைத்தும் அடங்கிய பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படவுள்ளது. தற்போது அதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாகவும் ரூ.1.90 கோடி செலவில் ஸ்மார்ட் கார்டு வடிவிலான பாஸ்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதால், மாணவர்கள் பழைய பாஸில் பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.