சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி, மேமோகிராம் கருவிகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கிவைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புதிதாக சிடி ஸ்கேன், பெண்களுக்கான மார்பக புற்று நோயை கண்டறிவதற்கு உரிய மோமோ கிராம் இயந்திரம் தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சர்வதேச தரத்திலான மருத்துவ கட்டமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கரோனா காலத்தில் போர்க்கால அடிப்படையில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கிவருகிறோம். அனைத்து மருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன் மற்றும் மேமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தவரை மூன்று தடுப்பூசிகள் உள்ளன. தற்போது இரண்டாம் கட்டமாக கோவாக்சின் தடுப்பூசி வெற்றிகரமாக 75 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவிட்ஷூல்ட் தடுப்பூசியின் இரண்டாவது தவணையில் முதற்கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளோம். தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பூசி முழுமையாக கண்டுபிடித்த பின்னர் அனைவருக்கும் கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதற்குரிய ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.