சென்னை: சமூக வலைதளங்கள் வாயிலாக காவல்துறை, அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தி மோசடி கும்பல் பணம் பறிக்கும சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது.
குறிப்பாக ஈரோடு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மேயர் ஆகியோரின் புகைப்படங்களை பயன்படுத்தி கிப்ட் கார்டு அனுப்பி, அதில் பணம் போட கூறிய மோசடி சம்பவங்களும் நடைபெற்றது.
இதேபோல் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு புகைப்படத்தை பயன்படுத்தி, காவல்துறை உயர் அலுவலர்களிடம் பணப்பறிப்பில் மோசடி கும்பல் ஈடுபட முயன்று வருவதாக, தமிழ்நாடு காவல்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில், “தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் டிபியாக வைத்து மோசடி கும்பல் காவல்துறை உயர் அலுவலர்களிடம் வழக்கம்போல பேச தொடங்கி, அதன் பிறகு அமேசான் கிப்ட் கார்டு அனுப்பி அதில் பணம் அனுப்ப வற்புறுத்துகின்றனர். இது போன்ற குறுஞ்செய்திகளை அனுப்பும் நபர்களை யாரும் நம்ப வேண்டாம்.
அதேநேரம் இது போன்ற மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரும்பாக்கம் கொள்ளை வழக்கு... குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ. 1 லட்சம் பரிசு