சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 27 வயது ஆண் பயணி ஒருவர், பெரிய பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்தார்.
சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை நிறுத்தி விசாரித்தனர். அந்தக் கூடைக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டனர். அதற்கு அந்தப் பயணி, கூடைக்குள் குழந்தைகள் விளையாடும் ரப்பரில் செய்யப்பட்ட பாம்புகள், பல்லிகள், எலிகள் போன்ற பொம்மைகள் இருப்பதாகக் கூறினார்.
ஆனாலும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவருடைய கூடையைத் திறந்து பார்த்து சோதனை செய்தனர். கூடைகளுக்குள் உயிருடன் கூடிய பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. இதையடுத்து சுங்க அதிகாரிகள் பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர். அதோடு அந்த கூடையைத் தனியே எடுத்து வைத்தனர்.
அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவு போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 14 பாம்பு குட்டிகள் இருந்தன.
அதில் 12 பாம்பு குட்டிகள் 'மில்க் பைத்தான்' எனப்படும் அரியவகை மலைப்பாம்பு குட்டிகள், 2 பாம்பு குட்டிகள் 'கிங்ஸ் ஸ்னேக்' வகையைச் சேர்ந்தவை. இந்த மலைப்பாம்பு குட்டிகள் அனைத்தும் வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளிலும் குளிர் பிரதேசங்களிலும் இருக்கக்கூடியவை என்பதையும், மேலும் இந்த பாம்பு குட்டிகள் விஷமற்றவை ஆனாலும் ஆபத்தானவை என்பதையும் கண்டறிந்தனர்.
அதன் பின்பு இந்த பாம்பு குட்டிகளைக் கடத்தி வந்த கடத்தல் பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், "விஷமற்ற இந்த வகை பாம்பு குட்டிகள், வெளிநாடுகளில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. இதை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து இங்கு சில வாரங்கள் வளர்த்து ஓரளவு பெரியதாக மாறியதும் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவோம்.
இந்தப் பாம்புகளை வாங்குவதற்கு என்று சிலர் இருக்கின்றனர். அவர்கள் இந்த பாம்புகளை பல்வேறு விதமாக பயன்படுத்துகின்றனர். சில பெரிய கோடீஸ்வரர்கள் பங்களாக்களில், கண்ணாடி தொட்டிகளில் மீன்கள் வளர்ப்பது போல் இந்தப் பாம்பு குட்டிகளையும் தொட்டிகளில் வைத்து வளர்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
பாம்புக் குட்டிகளைக் கடத்தி வந்த பயணியிடம் எந்த ஆவணங்களும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த பாம்புகளில் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடும். இவற்றை நமது நாட்டுக்குள் அனுமதித்தால் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் பரவி விலங்குகள், மனிதர்களுக்கும் பல்வேறு நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளது.
எனவே, இதை எந்த நாட்டிலிருந்து வந்ததோ? அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு, மத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறை போலீசார் அறிவுறுத்தினர். இதை அடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியைக் கைது செய்ததோடு அந்த 14 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், மீண்டும், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காகச் செல்லும் தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதற்கான விமான செலவுகள் அனைத்தையும், கடத்தல் பயணியிடம் வசூலிக்கவும் முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியல்ல... நீதிமன்றம்