சென்னை அம்பத்தூர், கொரட்டூர் பகுதிகளில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றன. இது குறித்து பொதுமக்கள் சார்பில் காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் கண்ணன், கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனிப்படை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் வந்து கொண்டிருந்தத ஒரு காரை தனிப்படை காவல் துறையினர் வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது, காரிலிருந்த நான்கு பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் கொளத்தூர், மாணிக்கராஜ் (36), அயனாவரம், ஹரிஹரன் (29), பாண்டிச்சேரி, முகமது ஜாஸ்மின் அரஃபாத் (24), அம்பத்தூர் அங்குராஜ் (38) என தெரியவந்தது. இவர்கள் சேர்ந்து அம்பத்தூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 50 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், காவல் துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர்.