சென்னை திருவொற்றியூர் சண்முகாபுரம் தெருவைச் சேர்ந்தவர் திலீப். இவர், அப்பகுதியில் செல்ஃபோன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஜன. 9ஆம் தேதி இவரது செல்ஃபோன் கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த 36 செல்ஃபோன்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் திலீப், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜன.20) கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பல்லு பாஸ்கர் (22), கௌரிசங்கர், அரவிந்தன், கார்த்திக் ஆகிய நான்கு பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 36 செல்ஃபோன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர், ஆர்.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை ஆகிய சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: பெரம்பலூரில் 17 பவுன் நகை திருட்டு: காவல் துறையினர் விசாரணை!