சென்னை: கடந்த நவம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. குறிப்பாக பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
அருணாச்சலா இம்பெக்ஸ், இன்டக்ரேட்டட் சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது போலியான ரசீதுகள் மூலம் விற்பனை கணக்கு காட்டியது தெரியவந்துள்ளது. இதில் முக்கிய சப்ளை நிறுவனமான அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி வருவாய் மறைத்து காட்டியது தெரியவந்தது.
பெஸ்ட்டால் மில் நிறுவனம் ரூ.80 கோடி வருவாயும், இன்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனம் ரூ. 150 கோடி அளவில் வருவாயும் கணக்கில் காட்டாமல் இருந்தது ஆவணங்களை சோதனை செய்ததில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தால் கணக்கில் காட்டப்படாத வருவாயின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நிறுவனங்களும் வருமான வரி சோதனை நடைபெறுவது குறித்து முன்கூட்டியே அறிந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனங்கள் வருமான வரி சோதனை வந்தால் சமாளிக்கும் வகையில் பல ஆவணங்களை மறைத்ததும் தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்கள் எவ்வளவு ஆண்டு காலமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருகிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுகவில் இணையும் அதிமுக பிரமுகர்? கோவை ட்விஸ்ட்!