சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் ஷ்ருதி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இரு குழந்தைகளும் தந்தையான பிரபு திலக்கின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி, தாய் ஷ்ருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை, ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் பிரபு திலக், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் என சுதாரித்து, முன் ஜாமீன் கோரி ஷ்ருதியும், அவரது சகோதரர் விஜய் ஆனந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்காத ஷ்ருதி மீதான போக்சோ குற்றச் சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 6 ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் எனக் கூறினார்.மேலும் முன் ஜாமீன் கோரிய ஷ்ருதிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஷ்ருதி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோவில், புகாரில் குறிப்பிட்டுள்ள படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என விஜய் ஆனந்த் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அது குறித்து தற்போதைய நிலையில் எந்த ஆய்வும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்! எதுக்கு தெரியுமா?