சென்னை: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பாக 'தேசிய கல்விக் கொள்கை 2020'-ஐ எதிர்த்து வரும் மே 15ஆம் தேதி தேசிய அளவில் மாநாடு நடைபெறவுள்ளது.
இது குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி கூறியதாவது, “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெகு காலமாக நீட் மற்றும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வருகின்றனர்.
இந்த தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு என்பது மாநில அளவில் இருந்து வருவதை தமிழ்நாடு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, தேசிய அளவில் பிற மாநிலத்தினரையும் எதிர்ப்புவிவகாரத்தில் ஒன்று சேர்க்க வேண்டும். இந்த மாநாடு மக்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு திணிக்கின்ற கல்விக்கொள்கை மூலமாக மாநிலத்தின் அதிகாரம் பறிக்கப்படுகிறது.
1 முதல் 12ஆம் வகுப்புகளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். மாநில அரசினால் எதுவுமே செய்ய இயலாத நிலை எற்படும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் நீட் மூலம் மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு நடத்தும் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
‘பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி; பணம் இல்லாதவர்கள் வெளியே செல்லுங்கள்’ என்ற சூழலைத்தான் ஒன்றிய அரசு உருவாக்குகிறது. இதனை எதிர்த்து வரும் மே 15ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் தேசிய அளவில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலக் கல்வி அமைச்சர்கள், கல்வியாளர்கள் பேராசிரியர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் கட்சியை விட்டு போன போதே கவலை படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம் - ஆர்.எஸ் பாரதி அதிரடி பேச்சு