சென்னை: சென்னை தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகியான RBVS மணியன், பட்டியலின பழங்குடியின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பட்டியலின, பழங்குடியினர், அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரைப் பற்றி அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட முன்னாள் தலைவர் இரா.செல்வம் என்பவர் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பிரிவுகளில் மணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (செப் 14) அதிகாலை 4.30 மணியளவில் மாம்பலம் காவல் துறையினரால் ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் விளக்கம் அளித்த மணியன், தனக்கு ட்விட்டர் கணக்கே இல்லை என்றும், எதையும் அதில் பதிவிடவில்லை என்றும், தான் பேசியதில் தவறான புரிதல் காரணமாக புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை ஆகிய காரணங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். அது மட்டுமல்லாமல், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இவ்வாறு அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி அல்லி, செப்டம்பர் 27ஆம் தேதி வரை மணியனை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: "No Means No" - டெல்லி அரசின் பட்டாசு தடைக்கு உச்ச நீதிமன்றம் ஆதரவு!