சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்குச் சென்ற பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி ஆகிய இருவர் மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜூலை 29ஆம் தேதி ஆயிரத்து 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல்செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்த விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்யக் கோரியும், வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, அதை மனத்தைச் செலுத்தி படித்து முடிவெடுக்காமல், விசாரணை வரம்பை கருத்தில்கொள்ளாமல் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் வழக்கு என்ற அழுத்தத்திலேயே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த டிஜிபியாக பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ள தன்னை பதவி நீக்கம் செய்யும் நோக்குடன், தனக்கு எதிராகப் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தபோது, பெண் ஐபிஎஸ் அலுவலர் அளித்த புகார் மீதான விசாரணை தொடங்கியுள்ளதால் வழக்கைத் திரும்பப் பெற உள்ளதாக முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெற நீதிபதி அனுமதியளித்து மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வெடிகுண்டு வழக்கு: விடுதலைப் புலிகள் உள்பட எழுவர் விடுதலை