சென்னை: சொத்துக்குவிப்புப் புகாரில் சிக்கிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் டிசம்பர் 2ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி தலைமைச் செயலக காலனி பகுதியைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ். அலுவலர் வெங்கடாசலம். இவர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பு
அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்கடாச்சலம் ஓய்வுபெறவிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வெங்கடாச்சலத்தின் வீடு உள்பட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் காட்டப்படாத 13.5 லட்சம் ரூபாய், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளிப் பொருள்கள், 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. இந்தத் தற்கொலை குறித்து வேளச்சேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடாச்சலத்தின் இரு செல்போன்களையும் பறிமுதல்செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
மன உளைச்சலில் வெங்கடாச்சலம்
வெங்கடாச்சலத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு ஆஜராகக் கூறியதாலும், சோதனையின்போது அவரது வீட்டில் பணம், நகைகள் பறிபோனதாலும் அவர் மன உளைச்சலில் இருந்ததாகக் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
இதனிடையே, லஞ்ச ஒழிப்புத் துறையின் துன்புறுத்தலால்தான் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதாகச் சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, வெங்கடாச்சலத்தின் தற்கொலை பல சர்ச்சைகள் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கல்லூரியில் கலை நிகழ்ச்சியைத் தவிர்க்க வேண்டும்'