சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் முகமது நசீர்.
இவர் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான பணிக்காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சுமார் 22 லட்ச ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தெரியவந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் முகமது நசீர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி பவுசியா பேகம் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று (நவ. 30) நடைபெற்றது.
அப்போது, நீதிபதி ஓம்பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி முகமது நசீருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பவுசியா பேகத்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் வில்லிவாக்கம் கொன்னூரில் உள்ள அவரது மூன்று வீடுகளை அரசுடைமையாக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.