மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் வடசென்னை மாவட்ட திமுகவின் முன்னாள் செயலாளர் எல்.பலராமன். துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மற்றும் க.அன்பழகன் வெற்றிக்கு அப்போதைய வடசென்னை மாவட்ட செயலாளர் என்ற முறையில் இவரின் உழைப்பு இன்றளவும் திமுகவினரால் போற்றப்பட்டு வருகிறது. இந்த எல்.பலராமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன், கோவிட்-19 நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. முத்தமிழறிஞர் கலைஞர் மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டும் அவரை ஏன், ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும், கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவரை இன்றைக்கு கழகம் இழந்து நிற்கிறது.
அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தை சென்னை மாநகராட்சி பயன்படுத்த உள்ளதா?