சென்னை : வருமானத்துக்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் வீடுகள் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
பறிமுதல்
இந்த சோதனையில் ரூபாய் இருபத்தி மூன்று லட்சத்து 85 ஆயிரம் ரொக்கம், சுமார் 4 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், 19 ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள 6 மாடி கொண்ட மேன்சன் உள்ளது. இதன் தரைத்தளத்தில் கோவையைச் சேர்ந்த சந்திரசேகர் (56) என்பவருக்கு chasun டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது.
அவர் அந்த நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். மேலும் மீனாட்சி சுந்தரம் என்ற மற்றொரு இயக்குநரும் இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் நண்பர் சந்திரசேகர் என தெரிய வருகிறது.
அலுவலகத்திற்கு சீல்
லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி யுவராஜ் தலைமையில் தரைத்தளத்தில் உள்ள சந்திரசேகருக்கு சொந்தமான அலுவலகத்தை நேற்று சோதனையிட சென்றனர்.
ஆனால் அலுவலகம் பூட்டி கிடந்ததையடுத்து சந்திரசேகருக்கு சொந்தமான அலுவலகத்தை எழும்பூர் வருவாய் ஆய்வாளர் தீபா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சஞ்சீவிகுமாரி ஆகியோர் முன்னிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர்.
உதவியாளர் வீட்டிற்கு சீல்
இதேபோல் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு நந்தனம் விரிவாக்கம் 11-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தபோது யாரும் இல்லாத காரணத்தால் , மயிலாப்பூர் தாசில்தார் நந்தினி மற்றும் மயிலாப்பூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் வீட்டை போலீசார் சீல் வைத்தனர். அவர்கள் வந்த பிறகு இரு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவார்கள் என தெரிகிறது.
இதையும் படிங்க : ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கேவிற்கு பாராட்டு விழா