மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த செல்லூர் ராஜூ, அதிமுக மாநாட்டு அழைப்பிதழை அங்கு வைத்து வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை போல் தங்களுக்கு ஜோசியம் பார்க்க வராது' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியால் மற்ற அமைச்சர்கள் அனைவரும் தூக்கம் இல்லாமல் பதற்றதுடன் தவித்து வருகிறார்கள் என விமர்சித்த செல்லூர் ராஜூ, வெண்ணெய் தின்ற கண்ணன் வாயைத் திறந்த போது உலகமே தெரிந்தது போல, செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் யார் யார் உள்ளே போகப் போகிறார்கள் எனத் தெரியவில்லை என நகைப்புடன் கூறி கிண்டல் அடித்தார்.
கூடவே, அந்த முப்பதாயிரம் கோடி ஊழல் விவகாரம் ஒருவேளை வெளியே வந்தாலும் வரலாம் என சிரித்தவாறே கூறினார். தொடர்ந்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செல்லூர் ராஜூ, அண்ணாமலை கருத்து குறித்து தனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை எனவும், குதிரைக்கு கடிவாளம் போட்டது போல நாங்கள் மாநாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு போன்ற ஒரு மாநாடு இதுவரை நடந்ததில்லை எனவும், இனி நடக்கப் போவதுமில்லை என்ற அளவிற்கு கின்னஸ் சாதனைப் படைக்கும் மாநாடாக இது அமையும் எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக மாநாடு குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா மாநாடு அரசியல் மாநாடாக நடைபெறுகிறது எனவும், இந்த மாநாடு தமிழகத்தில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை மக்கள் மாநாட்டில் பங்கேற்க வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுக்க உள்ளோம் எனவும்; இந்த மாநாட்டிற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாநாட்டுக்கு வரும் அதிமுக தொண்டர்களுக்கு உணவு தயாரிக்க 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த செல்லூர் ராஜூ, 3 இடங்களில் 300 கவுண்டர்கள் அமைத்து உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் இசையமைப்பாளர் தேவா கச்சேரி, மதுரை முத்து, ராஜலெட்சுமி - கணேஷ் ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உணவு கழக குடோனில் சரியான பராமரிப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு குடைச்சல் கொடுக்கும் வண்டுகள்!