சென்னை: திமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனு விசாரணை இன்று (பிப்.23) நடைபெற்றது.
அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட 16ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் தயாளன் வழக்கை தள்ளிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன், "மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டுள்ளார். தேர்தலன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கைதேர்ந்த ரவுடி, 420, கிரிமினலைத் தான் எனது தந்தை பிடித்து கொடுத்துள்ளார்.
சமூக விரோதிகளை திமுக ஊக்குவிக்கிறதா?
திமுகவினர் தாக்கியதில் எங்களுடைய வாகன ஓட்டுநர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமூக விரோதிகளை திமுக ஊக்குவிக்கிறதா? என்ற கேள்வி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவை அச்சுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதற்கு அதிமுக ஒருபோதும் அஞ்சாது. மேலும் ஒரு வழக்கை போட்டு நீதிமன்றத்தில் திமுக தரப்பு நாடகத்தை அரங்கேற்றி உள்ளது. சட்டப்போரட்டம் மூலம் நியாயம் கிடைக்கும்.
எந்த பயமும் இல்லை
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்பதால், எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
பாசிச அரசாங்கமான திமுக அரசுக்கும், Sadist முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கும் மக்கள் நலன் மீது சிறிதும் அக்கறை இல்லை" என்றார்.
பிணை மனு தள்ளுபடி
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பிணை மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதையும் படிங்க: மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது