சென்னை: காசிமேடு பகுதியில் சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், "சுனாமியால் உயிர் நீர்த்த பொதுமக்கள், மீனவர்கள் என அத்தனைப் பேருக்குமே நினைவஞ்சலி செலுத்தும் வகையில், அதிமுக சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. சுனாமி என்ற வார்த்தையே உலகமே கேள்விப்படாத ஒன்று. 2004ஆம் ஆண்டு சுனாமியின் தாக்குதல் மிககொடுரமாக இருந்து ஆசிய நாடுகள், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட போன்ற கடற்கரை பகுதிகளும் அதேபோல இலங்கை, இந்தோனேசிய போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் போர்க்கால நடவடிக்கையாக மீட்பு நடவடிக்கை எடுத்து, மறு வாழ்வு நடவடிக்கை நிவாரண நடவடிக்கை என அனைத்தும் முடுக்கிவிடப்பட்டு, உலக நாடுகளே வியக்கும் வகையில் சிறப்பான முறையில் செயல்பட்ட காரணத்தினால் மற்ற நாடுகள் கூட ஜெயலலிதாவின் ஆலோசனை பெறவேண்டும் என்பதற்காக அதிகாரிகளை எங்கள் நாட்டுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லி இங்கிருந்து பல நாடுகளுக்கு அதிகாரிகள் சென்று பணியாற்றினார்கள்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அந்த அளவுக்குச் சுனாமியாக இருந்தாலும் சரி, இயற்கை இடர்பாடுகளாக இருந்தாலும் சரி புயலாக, மழையாக, வறட்சியாக இருந்தாலும் சரி அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுத்த ஒரே தலைவி ஜெயலலிதாவின் அரசு தான். எடப்பாடியார் காலத்தில்கூட ஒக்கி புயல், கஜா புயல் ஆகியவற்றைத் திறமையாக எதிர்கொண்டு மக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விடியா அரசு இயற்கை இடர்பாடு என்றாலே மக்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்வதில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிற்கு முன்னர் பின்னோக்கி பார்த்தால் எந்த புயலுக்கு எந்த நிவாரணமும் அளித்தது கிடையாது. தற்போது மாண்டஸ் புயல் வந்து கிட்டவிட்ட 15 நாட்களுக்கு மேலாகிறது. இதே இடத்தில் முதலமைச்சர் வந்து பார்த்துவிட்டு உடனடியாக நிவாரணம் வழங்குவேன் என்று சொன்னார். 15 நாட்கள் ஆகிறது, இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை.
மாண்டஸ் புயல் நிவாரணம் கூட்டுறவுச் சங்க உறுப்பினருக்கும் தரவில்லை. கூட்டுறவுச் சங்க மகளிருக்கும் தரவில்லை. படகு உரிமையாளர், சின்ன கட்டுமரம், பெரிய கட்டுமரம் வைத்திருப்பவர்களுக்கு எந்த விதமான நிவாரணமும் இல்லை. படகுகள் மூழ்கி இருந்ததை அவரே (முதல்வரே) நேரில் பார்த்தார். இப்போது மீன்வளத்துறை அலுவலகத்தில் நீங்கள் டீசல் பில் கொண்டுவாருங்கள், படகு ஓடியதா இல்லையா என்று 10 கேள்விகள் கேட்டு மீனவர்களை அலைகழிய வைத்துள்ளார்கள், இதுவரை நிவாரணம் தரவில்லை.
எங்கள் ஆட்சிக் காலத்திலே நீங்கள்தான் முதலாளியா என்று பத்திரம் மட்டும் வாங்கிக்கொண்டோம். படகு முழ்கிவிட்டதா என்று 5 லட்சத்தைக் கையிலே அளித்தோம். ஆனால் இந்த அரசு முதலமைச்சர் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுவாக முதலமைச்சர் புயல் பாதித்த இடத்தைதான் பார்ப்பார்கள். புயல் கரையைக் கடந்தது மகாபலிபுரத்தில், நாங்கள் அங்குச் சென்று பார்க்கிறோம். முதலமைச்சர் அங்குச் சென்று பார்க்கவில்லை.
முதலமைச்சர் பார்க்கவில்லை என்றாலும் 7 கடற்கரை மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலே மீனவர்களுக்கு, எஞ்ஜின் பொருத்திய கட்டுமரம், விசைப்படகு, சிறிய விசைப்படகு, நாட்டுப் படகு இப்படி பகுதி சேதம் அடைந்து முழு சேதம் அடைந்து அவர்கள் தொழில் செய்யாமல் இருக்கிறார்கள்.
புயலுக்கு 10 நாட்களுக்கு முன்னர் தொழிலுக்குப் போகவில்லை. அதற்குப் பிறகு இப்போதும் தொழிலுக்குப் போகவில்லை. பொதுவாக இதுபோன்ற காலங்களில் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரத்தை அளிப்போம். எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு இருந்ததே அந்த பகுதியில் சங்கங்கள் மூலம் அளிப்போம்.
இந்த விடியா திமுக அரசு மீனவர்கள் அதிமுகவுக்கு ஒட்டு போடுவார்கள், எம்.ஜி.ஆர் மீதும், ஜெயலலிதா மீதும் பாசம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைப் பழித்து வஞ்சிக்கின்ற செயலைதான் செய்து கொண்டிருக்கின்றது. நமது கட்சியின் சார்பில் தற்போது இந்த நிகழ்வுக்கு வந்த கூட்டத்தைப் பாருங்கள். திமுகவினர் திருடன் வந்துவிட்டது போல சென்றார்கள். வெறும் 50 பேர்தான், மக்களைச் சந்திக்கத் தைரியம் இல்லை. மீனவர்களைச் சந்திக்கத் தைரியம் இல்லை. ஒப்புக்கு வந்துவிட்டுச் சென்றார்கள்.
நாங்கள் அனைத்து கிராமத்திற்கும் சென்றோம். நான் நேரடியாக 30 கிராமத்திற்குச் சென்று வந்தேன். ஒரு கிராமத்திற்காகவாவது இவர்கள் சென்றிருப்பார்களா. மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் அதில்தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிரச் செயல்பாட்டில் இல்லை. மீன்வளத்துறை அமைச்சராக இருந்தாலும் சரி மற்ற அமைச்சர்களாக இருந்தாலும் மக்கள் நலப்பணிகளைச் செய்வதில்லை.
அதிமுக இணைப்பதற்கான பணிகளை நடைபெற்றுவருவதாக சசிகலா கூறுவது வடிகட்டின பொய். ஆட்சியில் இல்லாதபோது 5 ஆயிரம் தரவேண்டும் என்றார் ஸ்டாலின். இப்போதுதான் ஆட்சிக்கு வந்துவீட்டீர்கள் அல்லவா. இப்போது 5 ஆயிரம் தரவேண்டியது தானே. நாங்கள் அட்டையில் வித்தியாசம் பார்க்கவில்லை. 2 கோடி அளவுக்கு அனைவருக்கும் கொடுத்தோம். காவல்துறையினரும் வாங்கினார். அனைத்து அட்டைக்கும் பாரபட்சம் இல்லாமல் வழங்கினோம். பொங்கல் விழாவை மகிழ்வோடு கொண்டாட வேண்டும் என்பதற்காக 2 கோடி குடும்பத்திற்கு அளித்தோம்.
கொடுப்பதே ஆயிரம் ரூபாய் அதில் இந்த அட்டை, அந்த அட்டை என்றால் எப்படி?. கரும்பும் இல்லை, அமைச்சர் ஏ,வ.வேலு பேசியதைப் பார்த்தீர்களா. நிர்வாகத்தை நடத்தத் தெரியாமல் ஆளுகிறார்கள் என்றால் அதற்கு அவரின் ஒப்புதல் வாக்குமூலமே போதும். அரசு என்ன தூங்கிக்கொண்டுள்ளதா. பொருட்கள் சரியாக இருந்தால் வாங்கப்போகிறோம். வெல்லம் கொடுத்தால் குறை என்று சொல்கிறீர்கள். இப்படி குறையைச் சொல்லி வருகிறீர்கள் என்று சொல்கிறார்.
இவர்களை நம்பி கரும்பு விவசாயிகள் கரும்பை பயிர் செய்தார்கள். இப்போது அதனை எங்குக் கொண்டுசெல்வார்கள். அதனை விற்க முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் தோழமை கட்சியே அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எப்படியோ வாய் திறந்துவிட்டார்கள். நிறையப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது. அதற்கு எல்லாம் வாய் திறக்கவில்லை. இதற்கு மட்டும் இரக்கமாகச் சொல்லியுள்ளார்கள். சத்தமாகச் சொல்ல வேண்டியதுதானே. கரும்பைக் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்காதீர்கள். கரும்பை இந்த அரசு கொள்முதல் செய்யாவிட்டால் விவசாயிகளுக்குச் செய்கின்ற மிகப்பெரிய துரோகம் இது.
பொங்கல் பரிசு குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. ஒன்றுபட்ட அதிமுகவை எடப்பாடியார் தலைமையில் ஒற்றுமையுடன் உள்ளது" என கூறினார்.