சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்த சி.எஸ். கர்ணன், அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியதால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றப்பட்டார்.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி சி.எஸ். கர்ணன், நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதோடு தன்னை தலித் என்பதால் பாரபட்சமாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதையடுத்து, நீதிபதி சி.எஸ். கர்ணன் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தானே தடை உத்தரவு பிறப்பித்ததுடன், 7 உச்ச நீதிமன்ற நீதிபதிகளை தனக்கு முன்னர் ஆஜராகும்படியும், நீதிபதிகள் நியமன ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கும் நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் கண்ணியத்திக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுத்து, 2017 மே 9ஆம் தேதி ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட்ட நீதிபதி சி.எஸ். கர்ணன், ஆறு மாத சிறை தண்டனை முடிந்து தனது ஓய்வுக்கு பிறகு 2017 டிசம்பர் மாதம் 20ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் முன்னாள் நீதிபதிகள், தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் ஹென்றி தீபன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிபதிகளின் பெயர்களை கூறி குற்றச்சாட்டுகளை சுமத்திய முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது தேசிய மகளிர் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.