சென்னை: ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்தின்போது காயமடைந்தவரும், சம்பவம் தொடர்பாக சாட்சி கூறியவருமான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசியா டெய்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளராக இருக்கிறார். இவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகக் கூறி, இன்று சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அனுசியா டெய்ஸி, "இனி நளினியை பற்றி பேசினாலோ, எல்டிடிஇ தலைவரைப் பற்றி பேசினாலோ, என்னை கொலை செய்து விடுவதாகக்கூறி எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாசமான வாய்ஸ் மெசேஜ்கள் மூலமாகவும் அச்சுறுத்தல்கள் வருகின்றன. வெளிநாட்டு எண்களில் இருந்தும் கொலை மிரட்டல்கள் வருகின்றன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ் காந்தியை நான்தான் கொன்றேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார். அதனால் அவரது ஆட்களும் எனக்கு தொடர்பு கொண்டு, இந்த கொலை மிரட்டல்களை விடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதி அளித்தார்" என்று கூறினார்.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் - பொன்முடி நம்பிக்கை