சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பினர் பெரிய கூட்டம் அல்லது மாநாடு இதுவரை நடத்தவில்லை. தொடர்ந்து நீதிமன்றங்களை நாடிய ஓபிஎஸ் தரப்பினருக்குத் தோல்வி மட்டுமே மிஞ்சியது. இறுதியாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்பாக இறுதி விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"வரும் 24-ஆம் தேதி திருச்சியில் மாபெரும் முப்பெருவிழா மாநாடு நடைபெறும். எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழா, அதிமுகவின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெறும். திருச்சி மாநாடு திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மக்களையும், தொண்டர்களையும் சந்திக்க இருக்கின்றோம். ஈபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டினாலும் சரி, செயற்குழுவைக் கூட்டினாலும் சரி அது சட்டவிரோதம்.
கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். ஏற்கனவே, அது தொடர்பாகக் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் புகழேந்தி பேசியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் கருத்திற்குக் கருத்து கூற விரும்பவில்லை. அந்த சம்பவம் நடைபெறும் போது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிதான் இருந்தார். நீங்கள் இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியைத்தான் கேட்க வேண்டும். எம்.ஜி.ஆர். போன்று கண்ணாடி, தொப்பியை எடப்பாடி பழனிச்சாமி அணிந்ததை வேதனையாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றம் சென்றும் பயனில்லை. அதிமுகவின் அடிப்படை விதிகளை மாற்றி பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே தலைமை பதவிக்கு வரமுடியும் என்று சர்வாதிகாரி போல ஈபிஎஸ் செயல்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பு உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். பின்னர், பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வரும். ஆனால் தற்போது அனைத்தையும் தலைகீழாக எடப்பாடி பழனிச்சாமி மாற்றி வைத்துள்ளார்" என கூறினார்.
இதையும் படிங்க: ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் செய்கிறார்: இயக்குநர் பா.ரஞ்சித்