சென்னை: எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று(ஜூலை1) நடைபெற்றது. இதில் அமைப்பு ரீதியாக உள்ள 76 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “திருச்சி மாநாட்டின் போது கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம். அந்த வகையில் விரைவில் கொங்கு மண்டல மாநாடு தேதி அறிவிக்கப்படும்
மேலும்,நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். தேர்தல் நேரம் வந்த பிறகு கூட்டணி குறித்து பேசுவோம். பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர். கொங்கு மண்டலம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலத்தில் இருந்து அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. அந்த தொண்டர்கள் இப்பொழுது எங்களிடம் உள்ளனர். கொங்கு மண்டலத்தின் தொண்டர்கள் ஈபிஎஸ் தரப்பிடம் இல்லை என்பதை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நிரூபித்துள்ளது.
முன்னதாக,கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி அரசை காப்பாற்றி தந்தோம். ஆனால் அதற்கான நன்றி அவர்களிடம் இல்லை. பொறுமையுடன் நான்கு ஆண்டு காலம் நாங்கள் பொறுத்து இருந்தோம். இனிமேலும் அந்த தவறை செய்யக்கூடாது என்பது நாங்கள் கற்றுள்ள பாடம்’ என்றார்.
மேலும்,’தொண்டர்களின் விருப்பத்தின்படி தான் இனி எங்களின் செயல்பாடு இருக்கும். நாங்கள் திமுகவின் B-டீம் அல்ல, எடப்பாடி பழனிசாமி தான் A-Z டீம். அவர் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும். அதிமுகவை குறைத்து மதிப்பிடுவதற்கு அரசியல் ரீதியாக யாருக்கும் தைரியம் இல்லை’ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன் அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்று ஆளுநருக்கே தெரியவில்லை, ஏன் எங்களிடம் அது பற்றி கேட்கிறீர்கள்? ஆளுநரின் அத்தகைய செயல்பாடு சரியானதாக இல்லை என மத்திய அரசே சொல்லி தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார் எனக் கூறினார்.
இதே நிலையில் நேற்று (ஜூன் 30) அதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டம் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்துகொள்ளுமாறு அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். தன்னுடைய தலைமையில் சந்திக்க இருக்கும் முதல் தேர்தல் என்பதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மீனை சைவத்தில் சேர்க்க வேண்டும் - ருசியாகப் பேசிய தமிழிசை