சென்னை: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின கொண்டாட்டம் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, ஜம்மு - காஷ்மீர், அந்தமான் - நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி, சண்டிகர் மற்றும் லடாக் உருவான தின கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரின் மனைவி லட்சுமி ரவி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "நமது தேசம் கலாச்சார நல்லிணக்கத்துக்குப் பெயர் பெற்றது. நமது அற்புதமான கலாச்சார பன்முகத்தன்மையின் கீழ் நமது கலாச்சார தொடர்ச்சியின் ஒற்றுமை உள்ளது. நமது நாட்டின் கலாச்சார ஒற்றுமையைக் கொண்டாடுவதே மாநில உருவாக்க தினத்தின் நோக்கம் ஆகும்.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இப்போது இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இது ஒரு மினி பாரதம். நாம் அனைவரும் ஒரே குடும்பம் போல வாழ்கிறோம்.
ரோஜா பூக்களின் இதழ்கள் ஒன்றிணைந்தால் அழகான பூவாகக் காட்சியளிக்கும். பூவைத் தாண்டி அவற்றுக்கு இருப்பு கிடையாது. ஒற்றுமை உணர்வு பலவீனமடைந்து காணப்படுவதற்கு, மக்கள் தங்கள் மாநிலங்களின் அடையாளங்களுக்குள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டதே காரணம் ஆகும்.
மாநிலங்கள் என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் ஆளுகை நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் நிறுவனங்களாகும். கலாச்சார ரீதியாக நாம் அனைவரும் ஒன்று. தமிழ்நாடு அல்லது கேரளாவில் மட்டும் பொங்கல் மற்றும் ஓணம் கொண்டாடப்படாமல் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள் என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை போல், நாம் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், நம் இதயம் ஒன்றாகவே துடிக்கிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என ஒரே குடும்பமாக, ஒரே இந்தியாவை நோக்கி நாம் ஒட்டுமொத்த குடும்பமாக வளர வேண்டும்.
ராஜ்பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா ஒரே குடும்பமாக ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழாக்கள் ஒவ்வோர் ஆண்டும் ராஜ் பவனால் கொண்டாடப்படும். இது ஒற்றுமையை வளர்க்கவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான குடும்பமாகப் பாரதத்தின் ஒருமைப்பாட்டின் உணர்வையும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் பேத்தி நந்தினி ஜெயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. நவ.4 முதல் அமலுக்கு வருகிறது..!