அமெரிக்காவின் வன உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு புலிக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உலகிலுள்ள அனைத்து வன விலங்கு சரணாலயங்களுக்கும் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை முடுக்கி விட்டார்.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தற்போது சுமார் 2 ஆயிரத்து 600 விலங்குகள் உள்ளன. அவற்றுள் 25 பெரிய புலிகள், 6 புலிக்குட்டிகள், 17 சிங்கங்கள் உள்ளன. கரானா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒருகட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, உயிரியல் பூங்கா கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் பார்வையாளர்கள் வருகைதர தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. விலங்குகள் பராமரிப்பு, நோய்த் தொற்று தடுத்தல், நேரத்திற்கு உணவு அளித்தல் மற்றும் விலங்கு இருப்பிட பராமரிப்பு போன்றவற்றை மத்திய, மாநில அரசுகளின் அறிவுரையின்படி பூங்கா நிர்வாகம் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ள அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கள ஆய்வு செய்யவும், விலங்குகளின் நலன் குறித்து கண்டறியவும், பூங்காவிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அப்போது, பூங்கா ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, முகக் கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளனவா, ஊழியர்கள் சமூக விலகலை கடைபிடித்து, முறையாக கைகளை சோப்பு கொண்டு கழுவி, கிருமிநாசினி உபயோகிக்கின்றனரா, நோய்த் தொற்று பரவாமல் இருக்க விலங்கு இருப்பிடங்களில் லைசால் திரவம் தெளித்து, தரமான உணவு வழங்கப்படுகின்றதா எனக் கேட்டறிந்தார். தொடர்ந்து, விலங்கு மருத்துவர்களின் அன்றாட விலங்குகள் பரிசோதனை போன்ற நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஆய்வு செய்தார்
மேலும், விலங்குகளுக்கு வழங்கப்படும் காய்கறி, பழங்கள், மீன் போன்றவை கிருமிநாசினி கலந்த நீரில் நனைத்து கிருமிகள் அகற்றப்பட்டு நன்றாக கழுவிய பின்னரே கொடுக்கப்பட வேண்டும். புலி, சிங்கம், சிறுத்தைகளுக்கு வழங்கப்படும் இறைச்சி தரம் சோதிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களின் சோதனைக்குப் பின்னரே, விலங்குகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய அவர் விலங்கு பராமரிப்பாளர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால், பணிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, விலங்கு இருப்பிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் விலங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில், விலங்குகளுக்கு வெப்பம் தணிப்பிற்காக ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையத்தின் அறிவுறைப்படி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசு செயலர் ஷம்புகல்லோலிகர், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர் துரைராசு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் எஸ்.யுவராஜ், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் யோகேஷ் சிங், துணை இயக்குநர் எஸ். சுதா, உள்பட வனத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.