இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடினார்.
பின்னர், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர், "நாங்கள் இலங்கையில் அமைதி, நல்வாழ்வை ஊக்குவிப்பதால், இலங்கையின் ஒற்றுமை, நிலைத்தன்மை, மாகாணங்களின் ஒருமைப்பாட்டிற்கு இந்தியா வலுவான ஒத்துழைப்பை எப்போதும் நல்கிவருகிறது.
இலங்கையில், இன நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும்வகையில், ‘அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டம்’ போன்ற நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நீண்டகாலமாக நாங்கள் ஆதரவளித்துவருகிறோம். ஒருங்கிணைக்கப்பட்ட இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி, சுயமரியாதை போன்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் இலங்கையின் சொந்த ஆர்வத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசமைப்பின் 13ஆம் சட்டத்திருத்தம் உள்பட, இலங்கை அரசால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கும் சம அளவில் இது பொருந்தும். அதன் விளைவாக இலங்கையின் முன்னேற்றமும் வளமும் நிச்சயமாக மேம்படும்" எனக் கூறியுள்ளார்" என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இலங்கையில் உள்ள தமிழ்ச் சகோதரிகள், சகோதரர்கள் மீது இந்திய அரசின் அக்கறையைக் குறிக்கும் ஒரு முக்கியமான அறிக்கை இது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
"இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் 13ஆம் சட்டத்திருத்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அவரது சொற்களைத் தமிழ்நாட்டு மக்கள் வரவேற்பது உறுதி. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளும் அயராத முயற்சிகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது" என்றும் புரோகித் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இலங்கைக்கு செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்