சென்னை: விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு இலங்கைக்குப் பயணிக்கும் விமான பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏழு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து பயணிகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் கலைத்து சோதனையிட்டனர்.
அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் வெளிநாட்டுப் பணத்தைக் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அவர்கள் ஏழு பேரிடமிருந்து ரூ.42.18 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தைப் பறிமுதல்செய்தனர். அத்தோடு அவர்களின் பயணங்களை ரத்துசெய்து, ஏழு பேரையும் கைதுசெய்தனர்.
இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமான பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியைச் சந்தேகத்தில் சோதனையிட்டனர். அவருடைய சூட்கேஸில் மறைத்துவைத்திருந்த ரூ.14.45 மதிப்புடைய சவுதி ரியால் பணத்தைக் கைப்பற்றினர். அத்தோடு அவரின் பயணத்தை ரத்துசெய்து, கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை: நால்வர் கைது