சென்னை: உலக அளவில் 'டிஸ்டோனியா' என்னும் நரம்பு சம்பந்தமான நோயால் லட்சத்திற்கு 16 பேர் பாதிப்பு அடைகின்றனர். நாகர்கோவிலைச் சேர்ந்த 57 வயதான சாந்தி ஹென்றி என்ற பெண்ணுக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திடீரென கழுத்து ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டதோடு, அவரால் சாப்பிடவோ அல்லது பேசவோ முடியாமல் போனது.
மேலும், அவரது வலது கை செயல்பாடு இல்லாமல் விறைப்பாக மாறியது. இந்த நிலையில் மேலும், அவரது உடலின் பல்வேறு உறுப்புகளும் அசைவற்ற நிலைக்குச் சென்றன. இதன் காரணமாக அவர் மிகவும் கடுமையாக அவதிப்பட்டு வந்தார்.
அத்துடன் அவரால் சுயமாக நாற்காலியில் உட்காரவோ, டிவி பார்ப்பதற்கோ, சாதாரணமாக நடப்பதற்கோ அல்லது சிறிது உணவு எடுத்துக்கொள்வதற்கு இயலாமல் தன்னிச்சையற்ற உடல் அசைவுகளால் அவருக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் படுத்த படுக்கையானார்.
இதனால் சென்னை ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமத்தினர். அங்கு நரம்பியல் பல்வேறு நிபுணர்களும் முழுமையான மரபணு சோதனைக்குப் பிறகு அவருக்கு 'டிஸ்டோனியா' என்னும் நரம்பு சம்பந்தமான நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு பொதுவான அரிய வகை மரபணு நோய் ஆகும். இது உலகில் லட்சத்தில் 16 பேரை மட்டுமே பாதிக்கிறது என மருத்துவர்கள் தெறிவிகின்றனர்.
இதையடுத்து அவருக்கு ரேலா மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் தலையில் மூளை செயல்பாட்டை தூண்டும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது சாந்தி நல்ல முன்னேற்றத்துடன் காணப்படுகிறார்.
இது குறித்து டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன் கூறுகையில்: ' 'டிஸ்டோனியா' என்பது மிகவும் சிக்கலான உடல் இயக்க பிரச்சினை சார்ந்த நோயாகும். இது தசைகளை சுருங்கச் செய்கிறது. இதன் காரணமாக நரம்புகள் சுருண்டு கொள்கின்றன. இது உடலின் ஒரு பகுதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அருகில் உள்ள உறுப்புகள் அல்லது உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கலாம்.
இயக்கத்தைக் கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கும் மூளையின் ஒரு பகுதியின் அசாதாரண செயல்பாட்டின் விளைவாக டிஸ்டோனியா நோய் ஏற்படுகிறது. மூளையின் இந்த பகுதியானது வேகம் மற்றும் உடல் இயக்க செயல்பாடு மற்றும் தேவையில்லாத இயக்கங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகும்.
முதலில் நோயாளிக்கு கழுத்து தசைகளுக்கு ஊசி போடப்பட்டது. ஏனெனில், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஊசி செலுத்தப்பட்டதன் மூலம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் குழு அவரது மூளைச் செயல்பாட்டை தூண்டுவதற்கான சிகிச்சையை அளித்தது. இதற்காக எம்.ஆர்.ஐ மற்றும் நியூக்ளியர் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதன் மூலம் மூளையின் செயல்பாடு துல்லியமாக கண்டறியப்பட்டு, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
நரம்பியல் அறுவை கிகிச்சை நிபுணர்கள் தலைமையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இது மூளையின் உள்ளே ஆழமாக இருக்கும் பகுதியில் முடி அளவு மின்முனையை பொருத்துகிறது. இந்த மின்முனையானது நரம்புகளை தூண்டும் பணிகளை செய்யும் மற்றும் தேவையற்ற இயக்கங்களை நீக்குவதோடு நீங்கள் விரும்பும் உடல் இயக்கங்களை தூண்டச் செய்கிறது. இது துல்லியமான அறுவை சிகிச்சை ஆகும்.
இந்த அறுவை சிகிச்சை சுமார் 3 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு நோயாளிக்கு கழுத்து பகுதியில் தசைகள் இழுப்பது வெகுவாக குறைந்து இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், நியூரோ ஸ்டிமுலேட்டரின் புரோகிராமிங் முடிந்ததும், சாந்தியின் வாழ்க்கை நிலை வெகுவாக மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’என்று டாக்டர் சங்கர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.