சென்னை: கொத்தவால்சாவடி ஆச்சாரப்பன் தெருவில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 1) உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு செயற்கையான முறையில் நிறங்கள் மூலம் மாற்றப்பட்ட அப்பளங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்த 1.5 டன் எடையுள்ள அப்பளங்களை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
மேலும், தரமில்லாத செயற்கை முறையிலான நிறங்கள் மாற்றப்பட்ட அப்பளம் தயாரித்துவந்த தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சவுகார்பேட்டையைச் சேர்ந்த விக்ரம் கபூர் என்பவருக்குச் சொந்தமான லோட்டஸ் ஃபுட் பிராசசிங் என்ற நிறுவனத்திற்கு வந்த அலுவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செயற்கையாக அப்பளங்களில் ரசாயனத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்த நிலையில், அந்நிறுவனத்தில் இருந்த 1.5 டன் அப்பளங்களுடன் நிறுவனத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மூடி சீல்வைத்தனர்.
மேலும் இந்த அப்பளத்தை உண்ணும் சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் எனவும், அப்பளத்தில் கலக்கப்படும் ரசாயனத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Exclusive: தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டிய இலங்கைத் தமிழ் மீனவர்கள்!