சென்னையில் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் தனியார் சூப்பர் மார்கெட் ஆன கிரேஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கு தேவையான காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தேக்கி வைத்து கொண்டு, மார்க்கெட்டுக்கு செல்லும் வகையில் திருவேற்காட்டில் குடோன் செயல்பட்டு வருகிறது. இதற்கான தொழில் உரிமம், கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கவில்லை. இந்நிலையில், இந்த குடோனில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரவி குமார் தலைமையிலான அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், குடோன் தொழில் உரிமத்தை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அலுவலர் கூறுகையில், கிரேஸ் சூப்பர் மார்கெட்க்கு சொந்தமான குடோனை புதுப்பிக்க பலமுறை நோட்டீஸ் அளித்தும் எந்தவித பதிலும் இல்லை. அதனால் இன்று சோதனை மேற்கொண்டு தொழில் உரிமத்தை ரத்து செய்தோம். மேலும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் ரூ.68 ஆயிரம் அபராதம் விதித்துள்ளோம்.தொழில் உரிமம் புதுப்பிக்கும் வரையில் இந்த குடோனில் இருந்து எதற்கும் பயன்படுத்தக் கூடாது. உரிமம் புதுப்பிக்காமல் மீண்டும் செயல்பட்டால் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்படும். இந்த குடோனில் ரூ.10 கோடி மதிப்பிலான உணவு பொருள்கள் தேக்கமடைந்துள்ளது, என்றனர்.