சென்னை தீவுத்திடலில் "மதராசபட்டினம் விருந்து" என்ற பெயரில் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
இந்த கண்காட்சி அரங்கில் தெருவோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளையும், அவற்றை எவ்வாறு பாதுகாப்பாக தயாரித்து, வழங்குவது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் பிரபலமாக உள்ள உணவுப்பொருட்களும், மகளிர் சுய உதவிக்குழு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முக்கியமாக இந்த உணவு கண்காட்சியானது, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் புரோட்டா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, கேழ்வரகு, கம்பு, திணை, கருப்பட்டி, வெல்லம் போன்ற சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு பொருட்கள் ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
முளைகட்டிய சிறு தானியங்களால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் சிறுதானியங்களை உண்பதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டுவருகிறது. அது மட்டுமின்றி இங்கு வருபவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.